10/6/14

ஒரு இளங்காலை நேரத்தில்!



காலை மணி 5.

வீட்டிலிருந்து வெளியே வந்து வீதியில் இறங்குகிறேன்..

இரு புறமும் பார்க்கிறேன்.

தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது.

தெரு ஓரத்தில் இருக்கும் சோடியம் வேப்பர் விளக்குகள்,ஒளியை உமிழ்ந்து கொண்டிருக் கின்றன.

ஆனால் அந்த முழு ஒளி சாலையின் மீது விழாமல்,இரு புறமும் படர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் தடுத்து நிற்கின்றன.

மரங்களின் இலை,கிளைகளின் ஊடாக வெளிச்சம் அங்கும் இங்குமாக விழுந்து கொண்டிருக் கிறது.

இருளும் ஒளியுமாகச் சாலை.

நடக்கத் தொடங்குகிறேன்.

எதிர் வீட்டு இளைஞன் லாபர்டாரை இழுத்துக்கொண்டு(அவன் இழுக்கிறானா,அது அவனை இழுக்கிறதா!) வருகிறான்.

அது மெல்ல ஓடி ஒரு விளக்குக் கம்பத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் காலைத் தூக்குகிறது.
உடன் அங்கிருந்து விலகி அருகில் இருக்கும் காரின் சக்கரத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் காலைத்தூக்குகிறது.

பின் அவனை இழுத்துக் கொண்டு நடக்கத் துவங்குகிறது.

நாயின் காரணமாக அவனுக்கு உடற்பயிற்சி!

ஒரு தெருநாய் வேகமாக ஓடி வீட்டு நாயைப் பார்த்துக் குரைக்கிறது.

பின் ஓட்டத்தைத் தொடர்கிறது(என்ன அவசரமோ!)

தெரு முனையில் இருக்கும் டீக்கடை திறக்கப்பட்டு விட்டது.

சிலநாட்கள் காலையில் சாலைப்பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் அங்கு நின்று டீ குடித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்று யாரும் இல்லை.

நினைத்துக் கொள்கிறேன்”இங்கு ஒரு நாள் டீ குடிக்க வேண்டும்”

தினமும் நினைப்பதுதானே!

அதோ வேலைக்காரப் பெண் இடுப்பில் எவர்சில்வர் தவலையுடன் வருகிறாள்

பச்சை கேட் வீட்டில் உள்ள அடி பம்பில் தண்ணீர் அடித்து வாசல் பெருக்கித் தெளித்துக் கோலமிடுவது வழக்கம்.

எதிரே உடல் முழுவதும் வெள்ளையாய்ப் போன பெண் வேக நடையில் வருகிறாள் .எப்போதும் போல் அவள் கையில் இருக்கும் செல்போன் சுலோகங்களைப் பாடிக் கொண்டிருக்கிறது.

எங்கே அந்தத் தம்பதி?இந்த நேரத்துக்கு வந்திருக்க வேண்டுமே?என்ன பிரச்சனையோ?

வானம் வெளுக்க ஆரம்பித்து விட்ட்து.

அவ்வளவுதான்.ஒரு சுற்றுப் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தாகி விட்ட்து.

இன்றைய நடை முடிந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக